கைலாய யாத்திரைக்கு 50 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்:



சென்னை, ஜன. 4: கைலாய யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு ரூ. 50 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

முஸ்லிம்கள் மெக்காவுக்கும், கிறிஸ்தவர்கள் ஜெருசலத்துக்கும் புனித பயணம் செல்ல அரசு மானியம் வழங்கி வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது கைலாயம் செல்ல இந்துக்களுக்கும் மானியம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, பொங்கல் பரிசாக கைலாய யாத்திரை செல்ல ரூ. 50 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்.

கைலாயம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், நேபாளம், திபெத் போன்ற நாடுகளின் வழியாக அங்கு செல்ல வேண்டியிருப்பதாலும் முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. எனவே, உடனடியாக மானியம் வழங்கினால்தான் இந்த ஆண்டு யாத்திரை செல்ல முடியும்.

வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு மானியம் வழங்காவிட்டால் அறவழியில் போராட்டம் நடத்துவோம் என்றார் அர்ஜுன் சம்பத்.பேட்டியின்போது தமிழகத் தெய்வீகப் பேரவையின் தலைவர் வி.மனோகர் உடனிருந்தார்.


கருத்தை பதிவு செய்யுங்கள்